கோவை:''லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டாலோ அல்லது தவறு செய்தாலோ, வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், 30.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவை லோக்சபா தொகுதியில், 20 லட்சத்து, 83 ஆயிரத்து, 34 வாக்காளர்கள், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், 15 லட்சத்து, 81 ஆயிரத்து, 795 வாக்காளர்கள் உள்ளனர். கோவையில், 580 இடங்களில், 2,048 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும். நகர்ப்புறத்தில் 1,424, புறநகரில் 624 ஓட்டுச்சாவடிகள் அமையும். 85 வயதுக்கு மேற்பட்டவர்களாக, 31 ஆயிரத்து, 875 பேர், மாற்றுத்திறனாளிகளாக, 14 ஆயிரத்து, 275 பேர் உள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு சென்று ஓட்டு பெறப்படும்.புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கான அடையாள அட்டை, தபால் துறை மூலமாக வீடு தேடிச் சென்று வழங்கப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதகமாக செயல்பட்டாலோ, முறைகேடுகள் செய்தாலோ, வழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்படும். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டு, துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடைய சர்வீஸ் புத்தகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. பணத்துக்கு கட்டுப்பாடு
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லக்கூடாது; ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பயன்பாட்டுக்கு, அதிக பணம் கொண்டு செல்லப்பட்டால், பறிமுதல் செய்யப்படும். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. 'அப்பீல் கமிட்டி' அமைக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை சரிபார்த்து, பணத்தை விடுவிப்பார்கள். ரூ.10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். தேர்தல் பிரசார பணியில், சிறுவர் - சிறுமியரை ஈடுபடுத்தக் கூடாது. இவ்வாறு, கலெக்டர் கூறினார்.எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறுகையில், ''லைசென்ஸ் பெற்று, துப்பாக்கி வைத்திருப்பவர்கள் ஒப்படைத்து வருகின்றனர். 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதியில்லை,'' என்றார். பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, டி.ஆர்.ஓ., ஷர்மிளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, தேர்தல் பிரிவு தாசில்தார் தணிக்கைவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.
உடனடி நடவடிக்கை'
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''தேர்தல் பாதுகாப்பு பணியில், 3,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 43 இடங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகள் பதற்ற மானவையாக குறியீடு செய்துள்ளோம். பதற்றமான இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.