கோவை;கோவையில் குப்பை அள்ளும் பணிக்கு நியமித்துள்ள துாய்மை பணியாளர்கள் கணக்கு கேட்டால், 'கிர்கிர்'ன்னு தலையை சுற்ற வைக்கிறது. தனியார் நிறுவன தொழிலாளர்கள், நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 'கணக்கு' மட்டும் காட்டப்படுகிறது. ஆனால், 'பளீச்' கோவை இன்னும் உருவாகவில்லை.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 100 வார்டுகளில், வீடு வீடாகச் சென்று குப்பையை தரம் பிரித்து சேகரித்து, குப்பை மாற்று மையங்களுக்கு சேர்ப்பிக்கும் பணி, தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது.அந்நிறுவனத்தினர், 3,442 துாய்மை பணியாளர்கள் நியமனம் செய்திருப்பதாக கணக்கு காட்டப்படுகிறது. ஒரு டன் குப்பை அள்ளுவதற்கு, ரூ.3,140 வீதம் மாநகராட்சியில் இருந்து அந்நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்தப்படுகிறது. இவ்வகையில், ஆண்டு ஒன்றுக்கு, 172 கோடி ரூபாய் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. மாற்றுப்பணிக்கு உத்தரவு
குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் வழங்கியதால், மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர துாய்மை பணியாளர்கள் 2,200 பேருக்கு மாற்றுப்பணி ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, குப்பையில் உரம் தயாரிக்கும் பணி, மழை நீர் வடிகால் துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது.இவர்களில், 200 பேர் மழை நீர் வடிகால் துார்வாரும் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில், மாநகராட்சிக்கு உட்பட்ட, 100 வார்டுகளில், 7,746 தெருக்கள் இருப்பதாகவும், இப்பகுதிகளில் உள்ள மழை நீர் வடிகால்களை துார்வார, 1,000 பணியாளர்கள் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது; இதற்கு, கூடுதலாக உள்ள, 845 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு சம்பளம், 679 ரூபாய், 87 காசுகள். ஒரு மாதத்துக்கு, ஐந்து கோடியே, 74 லட்சத்து, 490 ரூபாய், 15 காசுகள் செலவிடப்படுகின்றன.இத்தொகை ஒதுக்குவதற்கு சமீபத்தில் நடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, கவுன்சிலர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. குப்பை அள்ளும் பணி தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது; நிரந்தர பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். மீண்டும், 845 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஏன் நியமிக்க வேண்டும் என்கிற கேள்வியை அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் எழுப்பினார். ஏனெனில், இவ்வகையில் மட்டும் ஆண்டுக்கு, 70 கோடி ரூபாய் வரை, ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு சம்பளமாக வழங்க வேண்டும் என்பதால், இக்கேள்வி முன்வைக்கப்பட்டது. இவ்ளோ பேர் இருக்காங்களா
மாநகராட்சி நிர்வாகத்தால் தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளதன் அடிப்படையில் கணக்கிட்டால், தனியார் நிறுவன ஊழியர்கள் - 3,442, நிரந்தர பணியாளர்கள் - 2,200, மழை நீர் வடிகால் துார்வாருவதற்கான ஒப்பந்த பணியாளர்கள் - 845 என, மொத்தம், 6,487 துாய்மை பணியாளர்கள் பணிபுரிவதாக சொல்லப்படுகிறது. சராசரியாக ஒரு வார்டுக்கு, 64 பேர் வீதம் நியமிக்க வேண்டும். அவ்வாறு தொழிலாளர்கள் பணியில் இல்லை; நகரில் ஆங்காங்கே குப்பை தேங்கியிருக்கிறது. 'பளீச்' கோவை இன்னும் உருவாகவில்லை. மாநகராட்சியில் என்ன தான் நடக்கிறது என்கிற குழப்பமான நிலை காணப்படுகிறது.
பிரச்னைக்கு தீர்வு
இதுதொடர்பாக, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:தற்போதுள்ள குடியிருப்பு எண்ணிக்கைக்கேற்ப துாய்மை பணியாளர்களை ஒப்பந்த நிறுவனம் நியமிக்கவில்லை. அதனால், நிரந்தர பணியாளர்களையும் குப்பை சேகரிக்கும் பணிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கினால், அவற்றை ஏற்க மறுக்கின்றனர்; மண்டலம் விட்டு மண்டலம் செல்லவோ அல்லது வார்டு விட்டு வார்டு மாறிச் செல்லவோ தயக்கம் காட்டுகின்றனர். கூடுதலாக உள்ள, 845 துாய்மை பணியாளர்களை பணியில் இருந்து நீக்க முடியாது. அதற்கு பதிலாக, மழை நீர் வடிகால் துார்வாரும் பணி ஒதுக்கப்படுகிறது. அதற்கான ஒப்பந்தம் ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு, சம்பளம் வழங்க நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்தமுள்ள ஊழியர்களை கணக்கெடுத்து, மண்டலம் வாரியாக, வார்டு வாரியாக பிரித்து நியமித்தால், இதுபோன்ற பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.