யானைகள் வருகை அதிகரிப்பு: கவனமாக இருக்க அட்வைஸ்
வால்பாறை: பருவமழைக்கு பின் வால்பாறை வனப்பகுதி, எஸ்டேட்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. பருவமழைக்கு பின் வால்பாறையில் வனவளம் பசுமையானதால் கேரளாவிலிருந்து, மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிக்கு யானைகள் வரத்துவங்கியுள்ளன. மார்ச் மாதம் இறுதி வரை யானைகள் வால்பாறை வனப்பகுதியில் முகாமிடும் என்பதால், வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை அடுத்துள்ள தாய்முடி, நல்லமுடி, லோயர்பாரளை, பாறைமேடு, முருகாளி, ேஷக்கல்முடி உள்ளிட்ட எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. யானைகள் முகாமிட்டுள்ள தேயிலை காட்டில், தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கூடாது. இரவு நேரத்தில் யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் முகாமிடும் யானைகளை உள்ளூர் மக்களோ, சுற்றுலா பயணியரோ தொந்தரவு செய்யக்கூடாது. இவ்வாறு, கூறினர்.