தடாகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
பெ.நா.பாளையம்; தடாகம் வட்டாரத்தில் இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சின்ன தடாகம், நஞ்சுண்டாபுரம், மடத்தூர், பாப்பநாயக்கன்பாளையம், கணுவாய், திருவள்ளுவர் நகர், காளையனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில், 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. எனவே இப்பகுதியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், மலை அருகே உள்ள தோட்டங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.