காய்ச்சல் பரவல் அதிகரிப்பு; கொசு மருந்து அடிக்கணும்
வால்பாறை: வால்பாறை நகரில் கொசு தொல்லை அதிகரித்துள்ள நிலையில், நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறையில் கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்கிறது. பகல் நேரத்தில் பனிமூட்டமும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. இதனால் மக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வைரஸ் காய்ச்சலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சாரல்மழை பெய்யும் நிலையிலும், வால்பாறை நகரில் குடியிருப்பு பகுதியில் காலை, மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. மக்கள் கூறுகையில், 'வால்பாறையில் பருவமழை பெய்யும் நிலையில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதை வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது. சீதோஷ்ண நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், மக்களுக்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டினால் கொசுத்தொல்லையும் அதிகமாக காணப்படுகிறது. வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில், நகராட்சி சார்பில் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும்,' என்றனர்.