குட்டை திடலில் அதிகரிக்கும் நெரிசல் பஸ் ஸ்டாப்பை மாற்ற எதிர்பார்ப்பு
உடுமலை ;குட்டைத்திடல் நுாலகம் பஸ் ஸ்டாப்பை இடம் மாற்றி, நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.உடுமலை நகரில், தளி ரோடு குட்டைத்திடல் நுாலகம் அருகே, பஸ் ஸ்டாப் உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, திருமூர்த்திமலை, அமராவதி நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள், இந்த பஸ் ஸ்டாப்பில் நின்று பயணியரை ஏற்றிச்செல்கின்றன.உடுமலை தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை உட்பட இடங்களுக்கு செல்பவர்கள், இந்த பஸ் ஸ்டாப்பில் இறங்குகின்றனர். அங்கு நால்ரோடு சந்திப்பும் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும்.இந்நிலையில், பஸ் ஸ்டாப் பகுதியில், இருபுறங்களிலும், பஸ்கள் நிறுத்தும் போது, நால்ரோடு சந்திப்பில் பிற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால், நெரிசல் அதிகரித்து, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.முக்கிய ரோட்டில், ஏற்படும் நெரிசல், நகர போக்குவரத்தில், பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாகிறது.'நுாலகம் பஸ் ஸ்டாப்பில், பஸ்கள் நிறுத்தும் இடம் குறித்து, போக்குவரத்து போலீசார், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என நீண்ட காலமாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து, அரசுத்துறைகள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், நுாலக பஸ் ஸ்டாப்பை இடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாகியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.இதனால், அப்பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மேலும், நுாலகம் முன், தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியமாகியுள்ளது.