இந்தியாவின் பருத்தி உற்பத்தியை ஏக்கருக்கு 25 குவிண்டாலாக உயர்த்த வேண்டும்
நுா ற்பாலைத் தொழில் எதிர்கொள்ளும் சவால்களை முன்னிட்டு, தென்னிந்திய ஸ்பின்னர்ஸ் சங்கம் - சிஸ்பா பல்வேறு கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் வலியுறுத்துகிறது. கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் அவர்கள் வரும் டிச.,31ம் தேதி வரை பஞ்சின் மீது உள்ள 11சதவீத இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பதை சிஸ்பா வரவேற்கிறது. ஆனால், நுாற்பாலைகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த விலக்கு 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. இந்திய பருத்தி கழகம் உள்நாட்டில் பஞ்சை சர்வதேச விலைக்கு இணையான விலையில் விற்பனை செய்ய வேண்டும் எனவும், எம்.எஸ்.எம்.இ., நுாற்பாலைகளின் நலனிற்காக தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் உடனடியாக சி.சி.ஐ., டெப்போ அமைக்க வேண்டும் எனவும் சிஸ்பா வலியுறுத்துகிறது. மேலும், தற்போது சி.சி.ஐ., நிர்ணயித்துள்ள 30 நாட்கள் லிப்டிங் காலத்தை90 நாட்களாக நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பஞ்சின் விலை நிலையற்ற தன்மையால் எம்.எஸ்.எம்.இ., நுாற்பாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எனவே, பஞ்சு நுகர்வுக்கு கிலோவுக்கு ரூ.10 ஊக்கத்தொகை வழங்கினால் உற்பத்திச் செலவு குறைந்து, உலக சந்தையில் போட்டித்திறன் உயரும் என சிஸ்பா கேட்டுக்கொள்கிறது. நுாற்பாலைகளின் பணப்புழக்க சிரமங்களைத் தீர்க்க, திரட்டப்பட்ட மூலதனப் ஜி.எஸ்.டி., இன்புட் டேக்ஸ் கிரெடிட் ஏழு நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும் என சிஸ்பா மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. இந்தியாவில் பருத்தி உற்பத்தி ஏக்கருக்கு 4-5 குவிண்டாலாக மட்டுமே உள்ள நிலையில், ஆஸ்திரேலியா ( 1822), சீனா (1620), துருக்கி (15-18), பிரேசில் (14-18), அமெரிக்கா (13-16) குவிண்டால் போன்ற நாடுகளில் அதிகமாக உள்ளது. மேம்பட்ட பருத்தி விதைகள், நவீன சாகுபடி முறைகள், விவசாயிகள் பயிற்சி ஆகியவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு, உற்பத்தி ஏக்கருக்கு 25 குவிண்டாலாக உயர்த்தப்பட வேண்டும் என சிஸ்பா வலியுறுத்துகிறது. அனைத்து தொழில்களுக்கும் யூனிட் நுகர்வு அடிப்படையில் மின்சார ஊக்கத்தொகை வழங்கி, மற்ற மாநிலங்களுடன் சமமான போட்டித்தன்மையை உருவாக்க வேண்டும் என்றும் சிஸ்பா கோருகிறது. மேலும், 2022 முதல் வருடா வருடம் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்கள் தொழிற்சாலைகளுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி வருவதால், தமிழ்நாடு அரசு மற்றும் மின்சார வாரியம் இணைந்து இவ்வுயர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் சிஸ்பா கேட்டுக்கொள்கிறது.