கோவை : மின் கட்டணம் சார்ந்த இதர கட்டணங்கள், 471 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சமாளிக்க முடியாத குறு, சிறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மின் கட்டண குறைப்பைத் தவிர வேறு வழியில்லை என்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தொழில் அமைப்புகள் ஓரணியில் திரண்டு, முதல்வரைச் சந்திக்க முடிவு செய்துள்ளன.தமிழகத்தில், 2022 முதல் ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது. மின் கட்டண உயர்வு என பொதுவாகக் குறிப்பிட்டாலும், ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் அதிகபட்சம் உயரழுத்த மின் இணைப்புகளுக்கு 18 சதவீதம், தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கு 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், தேவைக் கட்டணம் (டிமாண்ட் சார்ஜஸ்) மற்றும் நிலைக்கட்டணம் ஆகியவை 471 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. இது, தொழில் அமைப்புகளை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக, எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் நிலைக்கட்டண உயர்வால் வெகுவாக பாதிக்கப்பட்டு, மூடப்பட்டு வருகின்றன.இதுகுறித்து பல்வேறு தொழில் அமைப்பினர் கூறியதாவது:
2022ல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. யூனிட்டுக்கான கட்டணம் மட்டுமல்லாது, இதர கட்டணங்கள் யோசித்து கூட பார்க்க இயலாத அளவு உயர்ந்தன. கிலோவாட்டுக்கு 35 ரூபாயாக இருந்த நிலைக்கட்டணம் தடாலடியாக, 428 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த திடீர் உயர்வைச் சமாளிப்பதற்குள் ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தற்போதும் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போது நாங்கள் குறைக்கக் கோருவது இந்த, 3.16 சதவீத உயர்வுக்காக அல்ல. தாழ்வழுத்த இணைப்புக்கான நிலைக்கட்டணம், 471 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை முன்பிருந்த அளவுக்கு குறைத்தால் மட்டுமே தொழிலை தொடர்ந்து நடத்த முடியும்.ஜி.எஸ்.டி., வசூல் நன்றாக இருக்கிறது என தமிழக அரசு கூறி வருகிறது. உற்பத்தித் துறை சார்ந்த ஜி.எஸ்.டி., எவ்வளவு குறைந்திருக்கிறது எனக் கணக்கிட்டுப் பார்த்தால் உண்மை நிலவரம் புரியும். மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற்றால் மட்டுமே, நிறுவனங்களை இயக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதற்காக, மாநிலம் தழுவிய அளவில் அனைத்துத் தொழில் அமைப்புகள் ஓரணியில் திரண்டு, முதல்வரிடம் முறையிட உள்ளோம். இவ்வாறு, தெரிவித்தனர்.சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வரும் இச்சமயத்தில், தொழில்துறைக்கான மின்கட்டண உயர்வு, தி.மு.க., அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
முதல்வரைச் சந்திப்போம்!
'கொடிசியா' தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், “மின்கட்டண உயர்வு மிகப்பெரிய சுமை. சமாளிக்கவே முடியவில்லை. இதுவரை மாவட்ட அளவிலான மிகப்பெரிய தொழில் அமைப்புகள் 22 மற்றும் கோவையில் 34 தொழில் அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன. மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி முதல்வரைச் சந்திக்க உள்ளோம். இதற்காக, அனுமதி கோரப்பட்டுள்ளது. இன்னும் ஏராளமான தொழில் அமைப்புகளும் கரம் கோர்க்கின்றன. கட்டண விலக்கு அளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.