ஆதி திராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளில் ஆய்வு
கோவை; தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கமிஷன் தலைவர் தமிழ்வாணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதனைத்தொடர்ந்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையிலுள்ள ஆதி திராவிட, பழங்குடியின மாணவ மாணவியர் தங்கும் விடுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான குடியிருப்புகளில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு செய்தோம். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தியிருக்கிறோம்.மேலும், பட்டா வழங்குவதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை சார்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் கலெக்டர், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாநில ஆணைய உறுப்பினர்கள் ரேகா பிரியதர்ஷினி, செல்வகுமார், பொன்தாஸ், ஆனந்தராஜ், போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், எஸ்.பி.,கார்த்திகேயன் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன்.மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்., மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கீதா, வருவாய் கோட்டாட்சியர்கள் கோவிந்தன், ராம்குமார், மகளிர் திட்டஅலுவலர் மதுரா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு வன உரிமைப் பட்டா, 8 பயனாளிகளுக்கு 1.92 லட்சம் மதிப்பீட்டில் இ--பட்டா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரியம் சார்பில் 10 பயனாளிகளுக்கு 86.84 லட்சத்தில் நேதாஜிபுரத்தில் வீடு ஒதுக்கீட்டு உத்தரவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் மூன்று பயனாளிகளுக்கு 72.51 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய கடனுதவி, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2 பயனாளிகளுக்கு 6.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான உத்தரவு,பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு 10.17 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான உத்தரவு, 66 பயனாளிகளுக்கு 2.92 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.