கல்லுாரி கனவு நிகழ்ச்சியில் சான்றிதழ் மாணவர்கள் பயன்படுத்த அழைப்பு
கோவை, ; கல்லுாரிகளில் சேரவுள்ள மாணவ, மாணவியர், தேவையான சான்றிதழ் பெறும் வகையில், கல்லுாரி கனவு நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை, மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர், உயர்கல்விக்கான வாய்ப்புகள், பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை, மேற்படிப்பு முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், கல்விக்கடன் மற்றும் உதவித்தொகை போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில், வழிகாட்டுதல் நிகழ்ச்சி, தமிழக அரசு சார்பில், அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்தப்படுகிறது.இதில், துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் நடப்பாண்டு, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, பொள்ளாச்சி என்.ஜி.எம்., கலை அறிவியல் கல்லுாரிகளில் நடத்தப்பட்டன.இன்று காரமடை ஆர்.வி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 21ம் தேதி, கற்பகம் கல்வி நிறுவனம், 23ம் தேதி, மாநகராட்சி பயிற்சி மையம் ஆகியவற்றில், இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.மேற்படிப்பு படிக்கவுள்ள மாணவர்களுக்கு, சாதி சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை முக்கிய தேவையாக இருக்கின்றன.இவற்றை பெறாத மாணவர்களின் நலனுக்காக, கடந்தாண்டு, வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடக்கும் போதே, சான்று பெற, இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.இந்த மையங்களில் பதிவு செய்யும் மாணவர்களுக்கு, ஒரு வாரத்தில் சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு மிகுந்த பயனாக இருந்தது.இந்த ஆண்டும், கல்லுாரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் நலனுக்கு என, இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.