மனப்பாடம் செய்வதைவிட புரிந்து படிப்பதே சிறந்தது
: ''மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும் நன்கு புரிந்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும்,'' என திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறினார். வாரந்தோறும், தொழில் அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர்களுடன், கலெக்டர் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அவ்வகையில், 9வது நிகழ்ச்சியாக தன்னார்வ பயிலும் வட்டம் பயிற்சி மையத்தில் பயின்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தயாராகும் 26 பேர் பங்கேற்றனர். இதில், பங்கேற்றவர்கள் மத்தியில் கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசியதாவது: மனப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும் நன்கு புரிந்து படித்தால் பயனுள்ளதாக இருக்கும். பள்ளி பாடத்திட்டங்களில் இருந்து அதிகளவிலான கேள்விகள் போட்டித் தேர்வில் கேட்கப்படுகிறது. போட்டித் தேர்வு எதிர்கொள்ளும் போது கடந்த, 10 ஆண்டுகளுக்கான கேள்வித்தாள் மற்றும் பாடத்திட்டத்தினை நன்கு படிக்க வேண்டும். கவன சிதறல்கள் இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவதும் அவசியம். இன்றைய உலகில், சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. அவற்றை ஒதுக்கிவிட்டு கவனச்சிதறல் இன்றி படிக்க வேண்டும். புத்தகங்கள் படிக்கப்படிக்க படிக்கும் திறன் அதிகரிக்கும். நுாலகம் சென்று தேர்வுக்கான புத்தகங்கள் படிக்க வேண்டும். செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, பேசினார். - நமது நிருபர் -