உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காஸ்மடிக் பொருள் தயாரிப்புக்கு கெடுபிடி புதிதாக 15 பேர் உரிமம் பெற்றதாக தகவல்

காஸ்மடிக் பொருள் தயாரிப்புக்கு கெடுபிடி புதிதாக 15 பேர் உரிமம் பெற்றதாக தகவல்

கோவை,; காஸ்மடிக் பிரிவின் கீழ், தயாரிப்பாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்று இருக்கவேண்டும். மருந்து கட்டுப்பாட்டு பிரிவின் தொடர் ஆய்வுகளுக்கு பின், 15 பேர் புதிதாக கோவையில் உரிமம் பெற்றுள்ளனர்.மருந்து, மருந்துவ உபகரணங்கள் தயாரிப்பில் உள்ள கெடுபிடி விதிமுறைகள், காஸ்மடிக் சார்ந்த பொருட்களில் இல்லாமல் இருந்தது. 2020 காஸ்மடிக் தயாரிப்பு மற்றும் விற்பனை விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டது. அதன் படி, அழகுசாதனம் தயாரிப்பில் ஈடுபடும் அனைவரும் அதற்கான கட்டாயம் உரிமம் பெற்று இருக்கவேண்டியது அவசியம். ஆனால், கோவை உட்பட தமிழகம் முழுவதும் பல பெண்கள், கிரீம், லிப் பாம், கண் மை, எண்ணெய் போன்ற காஸ்மடிக் சார்ந்த பொருட்களை வீட்டில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற தொழில்முனைவோர் மற்றும் பார்லர்களில் கிரீம்கள் குறித்து மருந்து கட்டுப்பாட்டு பிரிவினர், கடந்த ஜன., மாதம் முதல் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:மருந்துகள் போன்று காஸ்மடிக் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் கட்டுப்பாடுகள் உள்ளன. தயாரிப்புக்கான இடவசதி, தகுதியான ஆட்கள் நியமனம், தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்தும், விதிமுறைப்படி இருக்கவேண்டும். சமீபத்தில் கோவையில் பிரபலமாக முடிக்கான எண்ணெய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின் மீதும், வழக்கு பதிவு செய்துள்ளோம். இதுபோன்ற தொடர் ஆய்வுகள் காரணமாக, புதிதாக 15 பேர் உரிமம் எடுத்துள்ளனர். காஸ்மடிக் தயாரிப்பு பிரிவில் கோவையில் மொத்தமாக, 27 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது; சிலர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.உரிமம் இல்லாமல் விற்பது ஆய்வில் தெரியவந்தால், கட்டாயம் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி