உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி டீம் அமைக்கணும்: கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும்

ஆக்கிரமிப்புகளை அகற்ற தனி டீம் அமைக்கணும்: கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும்

கோவை: நடைபாதைகள் பாதசாரிகள் நடந்து செல்வதற்கே என்கிற சுப்ரீம் கோர்ட் உத்தரவை செயல்படுத்த, சிறப்பு அதிகாரத்துடன் டி.ஆர்.ஓ. அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமையில் தனி டீம் உருவாக்கி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்லும் வகையில், ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதையை உறுதி செய்ய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. நடைபாதையில் பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்; எங்கெல்லாம் சாலை இருக்கிறதோ அங்கு வரையறுக்கப்பட்ட நடைபாதை இருக்க வேண்டும். எவ்வித அச்சமுமின்றி நடந்து செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என கோர்ட் கூறியிருக்கிறது. கோவையில் எந்த சாலையில் சென்றாலும் நடைபாதை ஆக்கிரமிப்பில்தான் சிக்கியுள்ளது. ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள ரோடுகளிலும், பாதசாரிகள் பாதுகாப்பாக செல்ல நடைபாதை இல்லை. அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையே, பதைபதைப்புடன் செல்ல வேண்டியிருக்கிறது. ரோட்டை ஒட்டி மின் கம்பங்கள், தொலைதொடர்பு துறை பில்லர்கள், மரங்கள், கோயில்கள் இருந்தால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு சவுகரியமாகி விடுகிறது. அதுவரை கடைகளை நீட்டி, பரப்பி விடுகின்றனர். மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரோ, போக்குவரத்து போலீசாரோ அவற்றை அகற்ற அக்கறை செலுத்துவதில்லை. எப்போதாவது ரோஷம் வந்து அகற்றினாலும், நாளடைவில் 'கவனிப்பு' கிடைத்ததும் விட்டு விடுகின்றனர். மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரும் கண்டுகொள்வதில்லை. நெடுஞ்சாலைத்துறை திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலம் கையகப்படுத்த தனிப்பிரிவு உள்ளது. அதே போல் பாதசாரிகளுக்கு நடைபாதையை உறுதி செய்யவும் டி.ஆர்.ஓ. அந்தஸ்தில் தனி டீம் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு தனித்துவ அதிகாரம் வழங்கினால்தான், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த முடியும். எந்தவொரு வழித்தடத்திலும் நடைபாதையில் ஆக்கிரமிப்பு இருந்தால், போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற வேண்டும். அத்தோடு, அந்தந்த உள்ளாட்சி அமைப்பினர் நடைபாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். மீட்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது. அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாத, துணிச்சலான அதிகாரிகளை நியமித்து செயல்படுத்தினால், இது சாத்தியமே. திராவிட ஆட்சிகளில் நடக்காத ஒரு முக்கிய மாற்றமாக, த.வெ.க.ஆட்சி இதை செயல்படுத்தினால் மக்கள் கொண்டாடுவர். இதோ சில சாம்பிள் ஆக்கிரமிப்புகள்! * தண்டுமாரியம்மன் கோயில் எதிரே நஞ்சப்பா ரோடு துவக்கத்தில் இருந்து கிராஸ்கட் ரோடு திருப்பம் வரை, ரோட்டின் இருபுறமும் நடைபாதையே காணோம். * கிராஸ்கட் ரோட்டில் மாதிரி சாலை அமைக்கப்பட்டது. நடைபாதையை ஆக்கிரமித்து பூக்கடைகள், பொம்மை கடைகள், ஜவுளிக்கடைகள் என சாலையோர கடைகள் நடத்தப்படுகின்றன. * ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டிலும் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. * டவுன்ஹால் பகுதியில் கடைக்காரர்களே நடைபாதையை ஆக்கிரமித்துள்ளனர். * ஒப்பணக்கார வீதியில் பாதசாரிகள் செல்ல தடமே இல்லை. இரு சக்கர வாகனங்களை நிறுத்தி ரோட்டின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கின்றனர். * வைசியாள் வீதியில் கடைக்குள் இருக்கும் பொருட்களை விட, நடைபாதையில் அடுக்கி வைத்திருப்பதே அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ram
ஆக 26, 2026 14:06

mudalil தெருவின் முனையில் சாப்பாடு கடை மற்றும் இருசக்கர வாகன சர்விஸ் கடைகள் இருக்கக்கூடாது , அந்தமாதிரி இடத்தில திரும்பிக்கூட முடிவதில்லை


Neethi
ஆக 26, 2026 10:36

நீண்ட காலம் மனதில் இருந்த பாரம் குறைந்து விட்டது. வட இந்திய மாநிலங்களில் எவ்வித பாரபட்சமும் காட்டுவதில்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை