| ADDED : நவ 20, 2025 05:22 AM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் விநாயகம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட துணை செயலாளர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மகேஷ் குமார், கருப்புசாமி, வேளாண் அலுவலர் சங்க பொறுப்பாளர் வினோத், செவிலியர்கள் சங்க பொறுப்பாளர் கவிதா உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினர். கோரிக்கைகள் நிறைவேற்றா விட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்தப்படும் என, கூட்டத்தில் பேசினர். மாவட்ட துணை செயலாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.