| ADDED : ஜன 16, 2024 11:29 PM
கோவை;மாவட்ட அளவிலான கபடி போட்டியின் பெண்கள் பிரிவில், வளர்பிறை அணி கிடுக்கிப்பிடி போட்டு முதலிடம் பிடித்தது. கோவில்மேடு இளைஞர் மன்றம் சார்பில், 57ம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி, கோவில்மேடு இளைஞர் மன்ற மைதானத்தில் கடந்த இரு நாட்களாக நடந்தது.பெண்கள் பிரிவில் எட்டு அணிகளும், ஆண்கள் பிரிவில் 20 அணிகளும் பங்கேற்று, நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி போட்டியிட்டன.இதில் பெண்கள் பிரிவு, நாக் அவுட் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி கோவை 7ஸ், ரத்தினம் ஸ்போர்ட்ஸ் கிளப், அம்மன்குளம் வளர்பிறை கபடி கிளப் மற்றும் தேக்கம்பட்டி சிவக்குமார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள், லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், தலா மூன்று போட்டிகளில் விளையாடின. இதில், வளர்பிறை அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.தேக்கம்பட்டி சிவக்குமார் கிளப் அணி, இரண்டு போட்டிகளில் வென்று இரண்டாமிடத்தையும், ரத்தினம் அணி ஒரு வெற்றியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டன.