கர்நாடகா லாரி ஸ்டிரைக் உருளைக்கிழங்கு விலை உயர்வு
மேட்டுப்பாளையம்: கர்நாடகாவில் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறுவதை அடுத்து, உருளைக்கிழங்கு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில், லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர். காய்கறி லாரிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் 70-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்கு ஊட்டி, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து, கொண்டு வரும் உருளைக்கிழங்கை தரம் பிரித்து ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 100க்கும் மேற்பட்ட லாரிகளில் நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், கர்நாடகா குஜராத், கோலார் ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகளில் உருளைக்கிழங்கு கொண்டு வருவது வழக்கம். கர்நாடகா லாரி ஸ்டிரைக் குறித்து மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி வியாபாரிகள் கூறியதாவது: ஊட்டி உருளைக்கிழங்கு சீசன் மே மாதம் கடைசி வாரம் துவங்கும். தற்போது ஓரிரு லாரிகளில் மட்டுமே ஊட்டியலிலிருந்து, உருளைக்கிழங்கு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் ஸ்டிரைக் நடைபெறுவதை அடுத்து, வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள், ஆந்திர மாநிலம் வழியாக வருகின்றன. அதிலும் மிகவும் குறைவான அளவில் அதாவது, 200 லிருந்து 250 டன் கிழங்குகள் மட்டுமே, லாரிகளில் கொண்டு வருகின்றனர். இதனால் கடந்த வாரம் கோலார் உருளைக்கிழங்கு, 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 750 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று (நேற்று) அதே 45 கிலோ மூட்டை கிழங்கு குறைந்தபட்சம், 900 ரூபாய்க்கும், அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் உருளைக்கிழங்கின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு கிழங்கு மண்டி உரிமையாளர்கள் கூறினர்.