புதிதாக அமைய உள்ள நுாலகத்தால் காட்டூர் ஸ்டேஷன் இடமாற்றம்
கோவை, ; கோவை, மத்திய சிறைக்குச் சொந்தமான, 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டும் பணி நடக்கிறது. இந்த நுாலகத்தின் நுழைவாயில் பகுதி, தற்போது அமைந்துள்ள காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இருக்கும் இடத்தில் அமைய உள்ளது. இங்கு போலீஸ் ஸ்டேஷன் தவிர, போக்குவரத்து பிரிவு, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், உதவி கமிஷனர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நுாலகத்துக்கான நுழைவாயில் அமைக்கப்பட உள்ளதால், காட்டூர் போலீஸ் ஸ்டேஷனை இடித்து அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் கூறுகையில்,''பொதுமக்களுக்கு எவ்வித சிக்கலும் இன்றி வந்து செல்ல வசதியாக உள்ள இடம், தேர்வு செய்யப்பட உள்ளது. ''விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு போலீஸ் ஸ்டேஷன் மாற்றப்பட உள்ளது,'' என்றார்.