| ADDED : நவ 21, 2025 07:01 AM
கோவை: கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அத்தொகுதிக்கு நியமிக்கப்படும் வருவாய்த்துறை அதிகாரிகள் மருத்துவ காரணங்களை சொல்லி பணிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் 2,48,533 ஆண் வாக்காளர்களும், 2,53,012 பெண் வாக்காளர்களும், 166 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று, 5,01,711 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொகுதியாகும். பிற தொகுதிகளை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருப்பதால் பணிகளில் தொய்வு ஏற்படும் என்று முன்னதாகவே திட்டமிட்டு வழக்கத்தை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளையும் பணியாளர்களையும் நியமித்து பணி மேற்கொண்டு வந்தனர். ஆனாலும் பணிகள் வேகம் பெறவில்லை. இத்தொகுதிக்கு நியமிக்கப்பட்ட பல அதிகாரிகள் மருத்துவ காரணங்களை சொல்லி விடுப்பில் சென்று விட்டனர். அவர்களுக்கு பதிலாக வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்த தாசில்தார்கள் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தகவல் தெரிந்ததும் உத்தரவை கூட பெற்றுக்கொள்ளாத அதிகாரிகள் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டதோடு மருத்துவ சான்றையும் இணைத்து உயர் அதிகாரிகளிடம் காண்பித்து தேர்தல் பணியிலிருந்து தப்பினர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதாலும் மருத்துவ சான்றை இணைத்திருப்பதாலும் அதிகாரிகள் பேச முடியாமல் அமைதியாயினர். கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி வாக்காளர் மேற்பார்வை மற்றும் கண்காணிப்பதற்காக டிட்கோ (தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்) டி.ஆர்.ஓ. விஜயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழே வெவ்வேறு துறைகளில் பணிபுரியும் தாசில்தார் அந்தஸ்திலான, 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வெவ்வேறு துறையிலுள்ள அதிகாரிகளை கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் பணியில் ஈடுபடுத்த உயர் அதிகாரிகள் ரகசிய திட்டம் தீட்டிஉள்ளனர்.