உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு கனகராஜின் உறவினரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு கனகராஜின் உறவினரிடம் விசாரணை

கோவை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக டிரைவர் கனகராஜின் உறவினர் ரமேசிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.நீலகிரி, கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில், கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் சயான், மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் சேலத்தில், கார் விபத்தில் உயிரிழந்தார்.இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பான தடயங்களை அழித்ததாக அவரின் அணணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் ஜாமின் பெற்று வெளி வந்தனர்.இந்நிலையில், கனகராஜின் உறவினரான ரமேசிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அவர் நேற்று சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் காலை, 10:15 மணிக்கு ஆஜரானார்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் கூறுகையில், 'போலீசில் சரண் அடைய போவதாக தெரிவித்திருந்த டிரைவர் திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன், நான்கு மணி நேரம் ரமேஷ் அவருடன் இருந்துள்ளார். அதன் அடிப்படையில், கனகராஜை சந்திக்க யாராவது வந்தார்களா இல்லை மொபைல் அழைப்பு ஏதேனும் வந்ததா உள்ளிட்டவைகள் குறித்து விசாரிக்கப்பட்டது. மேலும், பிரச்னைகள் எதாவது இருந்ததா, அது குறித்து கனகராஜ் ரமேசிடம் தெரிவித்துள்ளாரா என்பது போன்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. இவரது, பதில்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி