ரொட்டிக்கடைக்கு சிறுத்தை விசிட்
வால்பாறை; வால்பாறை, ரொட்டிக்டை குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை விசிட் செய்ததால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.வால்பாறை நகரில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது ரொட்டிக்கடை. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தங்கும் விடுதிகள் அதிக அளவில் உள்ளதால் சுற்றுலா பயணியரும் அதிகம் வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு ரோட்டில் ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை, அங்குள்ள நடைபாதை வழியாக குடியிருப்பு பகுதிக்கு சென்றது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது.நீண்ட இடைவெளிக்கு பின், ரொட்டிக்கடை பகுதிக்கு சிறுத்தை வந்ததால், உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணியரும் பீதியடைந்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ரொட்டிக்கடை பகுதியில் உள்ள வீடுகளில் சிறுத்தைக்கு பிடித்தமான நாய், கோழி, பூனைகளை வளர்க்கின்றனர். இது தவிர, இறைச்சி கடைகளின் கழிவுகளை திறந்தவெளியில் வீசுகின்றனர். இதனால், சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.