வரி செலுத்தாதோர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்! நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
பொள்ளாச்சி, ; 'பொள்ளாச்சி நகராட்சியில் வரி செலுத்ததாவர்களின் பெயர் பட்டியல் வீதியில் பொதுமக்களிடம் காட்சிப்படுத்தப்படும்,' என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி நகராட்சியில், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் இரு அரையாண்டுகளில் அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான அரையாண்டுக்கு செப்டம்பர் 30க்குள்ளும், அக்டோபர் முதல் மார்ச் மாதத்துக்கான அரையாண்டுக்கு மார்ச் 31க்குள்ளும் நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்.உரிய நாட்களுக்குள் வரி செலுத்தாதவர்களுக்கு, ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. வரியை முறையாக செலுத்த வலியுறுத்தி, நகராட்சி வருவாய் பணியாளர்கள் வாயிலாக நேரில் சென்று வலியுறுத்தியும், அறிவிப்புகள் அனுப்பியும், ஆட்டோக்கள் வாயிலாக வீதிவீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதையடுத்து, பெரும்பாலான மக்கள் வரியை செலுத்த ஆர்வம் காட்டிய நிலையில், ஒரு சிலர் மட்டும் உரிய கால கெடுவுக்குள் வரி செலுத்தாமல் அலட்சியமாக காலம் தாழ்த்தியும், வரி ஏய்ப்பு செய்தும் வருகின்றனர்.இவர்களில் பெரும்பாலானவர்கள் கட்டட விதிமுறைகளை பின்பற்றாமல், கட்டடம் கட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரி செலுத்தாமல் உள்ளவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்படும், என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 27,260 சொத்து வரி விதிப்புகள் உள்ளது. இதில், 966 பேர், 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.இந்த வரி தொகையை வசூலித்தால் மட்டுமே, 15வது மத்திய நிதி குழுவின் மானியம் அதிகபட்சமாக, 10 கோடி ரூபாய் பொள்ளாச்சி நகராட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு வசூலிக்க இயலாத பட்சத்தில், மேற்படி மானியத்தை இழக்க நேரிடும். அந்த இழப்புக்கு நகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாதவர்களே காரணமாகும்.எனவே, வரி செலுத்தாத நபர்களால், நகராட்சிக்கு கிடைக்க வேண்டிய, 15வது மத்திய நிதிக்குழுவின் மானியம் கிடைக்காது என்ற விபரம் பொதுமக்களுக்கு முன்கூட்டியே எடுத்துரைக்கும் வகையில், நிலுவை வைத்திருக்கும் நபர்களின் பெயர் பட்டியல் அவர்கள் வசிக்கும் வீதிகளிலும், வணிக நிறுவனம் செயல்படும் பொது இடத்திலும் பெயர் பட்டியல் வைத்து பொதுமக்களிடையே காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, பொதுமக்களின் நலன் கருதி, இதுவரை நிலுவை சொத்து வரி செலுத்தாதவர்கள் மூன்று நாட்களுக்குள் சொத்து வரியை வரி வசூல் மையத்திலோ அல்லது 'ஆன்லைன்' வாயிலாகவோ செலுத்த இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. வரும், 20ம் தேதி (நாளை) வரை மட்டுமே காசோலையாக ஏற்றுக் கொள்ளப்படும்.சொத்து வரி செலுத்த தவறும்பட்சத்தில் வீதி தோறும் வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டு, பின்னர் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, இறுதியாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.