தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், பல்வேறு இடங்களிலும், அனுமதியின்றி இரவு, பகலாக நடந்துவரும் கிராவல் மண் கொள்ளையை தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதால், அரசுக்கும் கோடி கணக்கில் இழப்பு ஏற்படுகிறது.தொண்டாமுத்துார் வட்டாரம் இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அரணாக உள்ளது. இப்பகுதியில், விவசாயம் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே, தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள மலை ஒட்டியுள்ள பட்டா நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில், அனுமதி இன்றி கிராவல் மண் மற்றும் செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க வேண்டிய வருவாய்த்துறையினர், கனிமவள துறையினர்,போலீசார் என, அனைத்து துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.வெள்ளருக்கம்பாளையம், விராலியூர் ஆட்டுக்காரன்கோவில் பகுதி, பட்டியார் கோவில்பதியில், புது வாய்க்கால் பகுதி, வடிவேலாம்பாளையம், காளிமங்கலம், குப்பனுார் உள்ளிட்ட பகுதிகளில், பட்டா நிலங்களில் இருந்து அனுமதி இன்றி, கிராவல் மண் மற்றும் செம்மண்ணை, ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுத்து வருகின்றனர். இந்த மண்ணை லாரிகளில் ஏற்றி, கோவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், எந்த ஒரு இடையூறும் இன்றி விற்பனை செய்து வருகின்றனர்.மலை அடிவாரம் மற்றும் நீர்வழித்தடங்களில் அருகில், இரவு நேரங்களில் இயந்திரங்கள் கொண்டு மண்வெட்டி எடுப்பதால், அந்த சத்தத்தினால், காட்டு யானைகளும் வழி தவறி ஊருக்குள் புகுந்து பயிர் சேதம் மற்றும் உயிர் சேதமும் ஏற்பட்டு வருகிறது.மண் கொள்ளையை தடுத்து நிறுத்தினால், இயற்கை வளம் பாதுகாக்கப்படுவதோடு, வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதையும் தடுக்கலாம். இந்த சட்ட விரோத மண் கொள்ளையால், அரசுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், மண் கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் பிரசாந்திடம் கேட்டபோது, ''நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
தினமும் 1,000 யூனிட் கடத்தல்
தொண்டாமுத்துார் வட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால், வளம் இழந்த மண்ணை அகற்றி, பணமும் தருவதாவும் கூறி, மண் எடுக்கின்றனர். சுமார், 25 டிப்பர் லாரிகளில், நாள் ஒன்றுக்கு, குறைந்தது 10 முறை மண் எடுத்து செல்கின்றனர். இதில், ஒரு டிப்பர் லாரியில், 4 யூனிட் மண் கொண்டு செல்லப்படுகிறது. கிராவல் மண் ஒரு யூனிட், 2 ஆயிரம் ரூபாய்க்கும், செம்மண், 4 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கின்றனர். கோவை மாவட்டத்தில், பல பகுதிகளுக்கும் கட்டுமான பணி மற்றும் செங்கல் சூளைக்கும் விற்பனை செய்கின்றனர். ஆண்டுக்கு, கோடிக்கணக்கில் மண்ணை விற்கின்றனர். இதனால், அரசிற்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது.