இயந்திர கொள்முதல் மானியம் ஒரே தவணையில் வேண்டும்; குறு, சிறு தொழில் துறையினர் கோரிக்கை
கோவை; 'குறு, சிறு நிறுவனங்களுக்கு, தொழில் வளர்ச்சிக்காக வழங்கப்படும் 35 சதவீத மானியத்தை ஒரே தவணையில் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: தமிழக அரசு குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக, தொழில் துவங்குபவர்களுக்கும், விரிவாக்கம் செய்வதற்கும் புதிதாக இயந்திரங்களைக் கொள்முதல் செய்ய, 35 சதவீத மானியம் வழங்குகிறது. தமிழக அரசின் இம் மானியத்துக்காக தொழில்முனைவோர் விண்ணப்பித்தால், அதிகாரிகளின் ஆய்வு மற்றும் ஒப்புதலுக்கு பின் விடுவிக்கப்படுகிறது. அதாவது, 25 சதவீத மானியம் முதல் தவணையாக விடுவிக்கப்படுகிறது. எஞ்சிய 10 சதவீத மானியம் ஆண்டுக்கு 2 சதவீதம் என பிரித்து வழங்கப்படுகிறது. இதனால், 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் தொழில் மிகவும் மந்தமாக உள்ளது. இதனால், முதலீடு செய்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் குறு, சிறு தொழில் முனைவோர் யோசிக்க வேண்டியுள்ளது. துணிந்து முதலீடு செய்ய முடிவெடுத்தால், நிதி திரட்டுவது சிரமமாக உள்ளது. இந்த நெருக்கடியை தவிர்க்க, தமிழக அரசு, குறு நிறுவனங்களுக்கு வழங்கும் மானியத்தொகை 35 சதவீதத்தையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும். அதேபோல், ஜி.எஸ்.டி., ஜாப் ஆர்டர் செய்யும் குறு, சிறு நிறுவனங்களுக்கு வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதற்காக, மத்திய அரசிடம் மாநில அரசு எங்களின் நியாயமான கோரிக்கையை எடுத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.