சாலை பாதுகாப்பு குழு கருத்தாளராக மனுநீதி
கோவை: கோவை மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையில் சாலை பாதுகாப்பு குழு செயல்படுகிறது. இக்குழுவில் வருவாய்த்துறையினர், போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உள்ளனர். இக்குழு கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். மாநில நெடுஞ்சாலைத்துறையில் சாலை பாதுகாப்பு பிரிவில் கோட்ட பொறியாளராக இருந்த மனுநீதி, சமீபத்தில் ஓய்வு பெற்றார். இவரது பணிக்காலத்தில், கோவையில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு ஏற்படுத்தினார் . அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பதற்காக, இவரது திறமையை பயன்படுத்தாமல் ஒதுக்கி விட வேண்டாம் என, தொழில்துறையினர் தரப்பில் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவுக்கு கருத்தாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் நடக்கும் குழு கூட்டத்தில் பங்கேற்று, பங்களிப்பை செலுத்த வேண்டு மென, கலெக்டர் பவன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.