மாதா அமிர்தானந்தமயி தேவி கோவை வருகை
பெ.நா.பாளையம்; கோவையில் நடக்கும் பிரம்மஸ்தான ஆலய விழாவில் கலந்து கொள்ள மாதா அமிர்தானந்தமயி தேவி கோவை வருகிறார்.கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையம் ராமசாமி நகரில் அமிர்த வித்யாலயா வளாகத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவி மடம் உள்ளது. இங்குள்ள பிரம்மஸ்தான ஆலய, 24வது ஆண்டு விழாவில் மாதா அமிர்தானந்தமயி தேவி கலந்து கொண்டு, நாளை, நாளை மறுநாள் பக்தர்களுக்கு ஆசி உரை வழங்குகிறார்.பிரம்மஸ்தான கோவில் அருகே பள்ளி வளாகத்தில் நடக்கும் முதல் நாள் நிகழ்ச்சியான, 22ம் தேதி சனிக்கிழமை காலை, 7:30 மணிக்கு சனி தோஷ நிவாரண பூஜை, ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அம்மாவின் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இரண்டாம் நாள், 23ம் தேதி காலை, 7:30 மணிக்கு ராகு தோஷ நிவாரண பூஜை, ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை அதை தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அம்மாவின் சத்சங்கம், பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடக்கிறது. இதையொட்டி நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயா வளாகத்தில் மாதா அமிர்தானந்தமயி தேவி ஆன்மீக உரையாற்றும் பகுதியில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும், 2 நாட்களும் மூன்று வேளையும் அன்னதானம் நடக்கிறது. பிரம்மஸ்தான ஆலயத்தில் சிறப்பு ஹோமங்களும் தோஷ நிவாரண பூஜைகளும் நடக்கிறது. விழாவில், பக்தர்கள் கலந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.