| ADDED : ஜன 20, 2024 12:00 AM
வால்பாறை:கேரளாவுக்கு இடம் பெயரும் யானைகளால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்கள் உள்ளன.தமிழக -- கேரள எல்லையில்,1 வால்பாறை அமைந்துள்ளதால் ஆண்டு தோறும் பருவமழைக்கு பின், கேரளாவில் இருந்து மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறைக்கு யானைகள் இடம் பெயர்ந்தன.யானைகள் எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு, பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கும் புகுந்து, வீடு மற்றும் கடைகளை சேதப்படுத்தி வருகின்றன.இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பகல் நேரத்தில் தேயிலை காட்டிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதியிலும் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், மழைப்பொழிவு குறைந்து வெயில் நிலவுவதால், பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்ட யானைகள், கொஞ்சம், கொஞ்சமாக மீண்டும் கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர துவங்கியுள்ளன. இதனால் வால்பாறை தேயிலை தோட்டதொழிலாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் தற்போது உள்ள யானைகளுடன், கேரளாவிலிருந்து வந்த நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள், கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டன.வால்பாறையில் தற்போது நிலவும் சீதோஷ்ணநிலை மாற்றத்தால், யானைகள் தனித்தனி கூட்டமாக கேரளாவுக்கு இடம் பெயர துவங்கியுள்ளன. பருவமழை துவங்கிய பின், யானைகள் மீண்டும் வால்பாறைக்கு வரும்,' என்றனர்.