உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலை கிராமங்களுக்கு மினி பஸ் வசதி; பழங்குடியின மக்கள் கோரிக்கை

மலை கிராமங்களுக்கு மினி பஸ் வசதி; பழங்குடியின மக்கள் கோரிக்கை

பெ.நா.பாளையம்; ஆனைகட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மலை கிராமங்கள் இடையே மினி பஸ் வசதி ஏற்படுத்த வேண்டுமென பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை வடக்கில், தமிழக, கேரள எல்லை பகுதியில் ஆனைகட்டி உள்ளது. இங்கு, இருபதுக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இதில், ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். கோவையிலிருந்து ஆனைகட்டி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மலை கிராமங்களுக்கு இடையே வாகன வசதி இல்லை. குறிப்பாக, பனப்பள்ளி, கண்டிவழி, கொண்டனூர், கொண்டனூர் புதூர், பெரிய ஜம்பு கண்டி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களுக்கு ஆனைகட்டியில் இருந்து பேருந்து வசதி இல்லை.இதனால் பழங்குடியின மக்கள் ஆட்டோ அல்லது ஜீப் பிடித்து ஆனைகட்டி பகுதிக்கு சென்று திரும்ப வேண்டி உள்ளது. இல்லாவிட்டால், வனப்பகுதி வழியாக பல கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும், பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து ஆனைகட்டி பழங்குடியின மக்கள் கூறுகையில்,ஒரு முறை ஆனைகட்டி சென்றுவர குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் செலவாகிறது. மேலும் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் மூன்று பேர் செல்ல வேண்டிய ஆட்டோவில் ஆறு பேர் பயணம் செய்கின்றனர்.இரவு நேரங்களில் வனப்பகுதியில் உள்ள பாதையில் செல்வதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி விடுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே பனப்பள்ளி, கொண்டனூர் புதூர், பெரிய ஜம்பு கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆனைகட்டிக்கு மினி பஸ் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை