மேட்டுப்பாளையம்: பருவமழை காரணமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சாலையில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும், வடிகால்களை சுத்தம் செய்வதுடன், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தால், அதை சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பள்ளிக்கட்டடங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: பருவ மழை காலங்களில், பாதிக்கப்படக்கூடிய வகுப்பறைகள், தண்ணீர் தேங்கும் இடங்கள், மின் கம்பங்கள், கம்பிகள், மரங்கள் ஆகியவற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையாக, பள்ளிகளில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகளின் உறுதி தன்மை குறித்தும், தண்ணீர் தேங்கும் இடங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கட்டடம் பராமரிப்பு பணிகள், புதிய கட்டுமான பணிகள், இதற்காக தோண்டப்பட்ட குழிகள் உள்ள இடங்களுக்கு, மாணவர்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைக்க வேண்டும். பாதிப்படைந்துள்ள வகுப்பு அறைகளை பூட்டி வைத்து, அங்கு யாரையும் செல்ல அனுமதிக்க கூடாது. இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து காரமடை வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது: காரமடை, மேட்டுப்பாளையம் வட்டார அளவில், 123 ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், 7600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிகளின் கட்டடங்களை ஆய்வு செய்ததில், பயப்படும்படி பாதிப்புகள் அடையும் வகையில், எந்த கட்டடங்களும் இல்லை. அன்னூர் சாலையில் உள்ள தேரம்பாளையத்தில் ஓட்டு கட்டடத்தில் இயங்கும் துவக்கப்பள்ளி வகுப்பறை, வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஓட்டு கட்டடத்தை இடித்து விட்டு, புதிதாக வகுப்பறை கட்டிக் கொடுக்கும் படி, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று மேட்டுப்பாளையம் நகராட்சியிலும், பள்ளி வகுப்பறைகளை சீரமைக்கும்படி, கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வகுப்பறைகள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளன. இவ்வாறு கல்வி அலுவலர்கள் கூறினர்.