| ADDED : நவ 20, 2025 05:25 AM
வால்பாறை: சோலையாறு எஸ்டேட் ரோடு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக சீரமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் உறுதியளித்ததால், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். வால்பாறையில் இருந்து முடீஸ் செல்லும் ரோட்டில் சோலையாறு எஸ்டேட் அமைந்துள்ளது. சோலையாறு நுழைவுவாயில் முதல் சித்திவிநாயகர் கோவில் வரையிலான, 5 கி.மீ., துாரத்துக்கு ரோடு கரடு முரடாக உள்ளதால், வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இது குறித்து ஆலோசிக்க, நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு நகராட்சித்தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை வகித்தார். கூட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பொள்ளாச்சி கோட்ட மேலாளர் ஜோதிமணிகண்டன், வால்பாறை கிளை மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசும் போது, 'சோலையாறு செல்லும் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அரசு பஸ்கள் தொடர்ந்து இயக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான நேரங்களில் இந்த வழித்தடங்களில் இயக்கும் பஸ்களில் 'லீப்' கட்டாகி விடுகிறது. இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்க ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்,' என்றனர். நகராட்சி தலைவர் பேசும் போது,'வால்பாறையில் இருந்து நல்லகாத்து ரோடு வழியாக சோலையாறு எஸ்டேட் செல்லும், தனியார் எஸ்டேட் ரோட்டை சீரமைக்க மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது. கலெக்டரின் ஒப்புதல் வந்த பின் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.