உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரி ஏய்ப்பு செய்வோருக்கு இறுதி வாய்ப்பு; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

வரி ஏய்ப்பு செய்வோருக்கு இறுதி வாய்ப்பு; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

பொள்ளாச்சி : ''பொள்ளாச்சியில் வரி ஏய்ப்பு செய்வோருக்கு கடைசி வாய்ப்பாக, வரும், 15ம் தேதிக்குள் வரியை முறைப்படுத்தி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,'' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சியில், சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட வகையில், ஆண்டுக்கு 33.77 கோடி ரூபாய் வருவாய் வர வேண்டியுள்ளது. அதில், வரி ஏய்ப்பு செய்வோர்களை கண்டறியும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:வணிக நிறுவனங்கள் நடத்திக்கொண்டு, குடியிருப்பு அடிப்படையில் சொத்து வரி செலுத்தி நகராட்சிக்கு வரி ஏய்ப்பு செய்து வரும் கட்டடங்களில், மின் இணைப்பு மற்றும் ஜி.எஸ்.டி., பதிவு அடிப்படையில் வருவாய் அலுவலர்கள், கடந்த, 10 நாட்களாக நேரில் கள ஆய்வு செய்து உண்மை தன்மையை கண்டறிந்து மாற்றம் செய்து வருகின்றனர்.இதுவரை, 182 கட்டடங்களுக்கு மொத்தம், 31 லட்சத்து, 51 ஆயிரத்து, 614 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்பணி வரும், 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதால் வருவாய் பிரிவு பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.எனவே, இதுவரை வணிக பயன்பாட்டுக்கு விடப்பட்டு இருக்கும் கட்டட உரிமையாளர்கள், உடனடியாக வணிக பயன்பாடுக்கு சொத்து வரியை மாற்றம் செய்து கொள்ள வேண்டும். வணிகம் செய்து வரும் நிறுவனங்கள் உடனடியாக தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி விதித்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.இதுவரை தங்களது கட்டடத்துக்கு சொத்து வரி விதிக்காதவர்களும், கட்டடம் கட்டி முடித்த நாள் முதல் சொத்து வரி விதித்து கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் அபராத தொகையுடன் பயன்பாட்டு மாற்றம் செய்யப்படும்.தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் விதியின் கீழ், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இறுதி வாய்ப்பாக நகராட்சி அலுவலகத்தை அணுகி வரிகளை விதித்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி