தொழிலதிபர் வீட்டின் மீது ஆசிட் குண்டு வீசிய மர்மநபர்கள்
பாலக்காடு; பாலக்காட்டில், தொழிலதிபர் வீட்டின் மீது ஆசிட் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், புலாபற்றை உம்மநழி பகுதியை சேர்ந்தவர் ஐசக் வர்க்கீஸ். கட்டுமான துறையில் ஈடுபட்டுள்ள இவர், ரப்பர் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவர் வீட்டின் முன்பக்கம் உள்ள பூந்தோட்டம் கருகிய நிலையில் காணப்பட்டது. சந்தேகமடைந்த அவர், வீட்டில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமரா காட்சிகள் பார்த்துள்ளார். அப்போது, கடந்த 13ம் தேதி நள்ளிரவு இரு கார்களில் வந்த மர்மநபர்கள் ஆசிட் குண்டு வீசி சென்றுள்ளது தெரிந்தது. இதுகுறித்து, நேற்று கோங்காடு போலீசார் அவர் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கேமரா பதிவு காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கியுள்ளனர். போலீசார் கூறுகையில், 'இச்சம்பவத்தின் பின்னணியில் தொழில் போட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தொழில் எதிரியான ஒருவர், எர்ணாகுளம் பகுதியில் உள்ள கூலிப்படையை வைத்து ஆசிட் குண்டு வீசியதாக புகார் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக் உட்படுத்தி விசாரணை நடக்கிறது,' என்றனர்.