தேசிய கூடைப்பந்து போட்டிதமிழக அணிக்கு கோப்பை
கோவை: தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வென்ற, தமிழ்நாடு அணியில் பங்கேற்ற, கோவை மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநில அளவிலான சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டி, திருச்சியில் நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு அணியில் இருந்தும் சிறப்பாக விளையாடிய 12 பேர், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், கோவை ராமநாதபுரம் அல்வேர்னியா பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியர் ஜெசிகா மற்றும் மரிய பிரிஜிதா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். சமீபத்தில், டேராடூனில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், 13 வயதுக்கு உட்பட்ட தமிழக அணியில் விளையாடினர். இறுதிப் போட்டியில், மகாராஷ்டிரா மற்றும் தமிழக அணிகள் பங்கேற்றன; வெற்றி பெற்ற தமிழக அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. மாணவியர் ஜெசிகா மற்றும் பிரிஜிதாவுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.