தேசிய மாணவர் படையினர் புகையிலை எதிர்ப்பு பேரணி
கோவை, : புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.நாடு முழுவதும் வரும், 24ம் தேதி, 76வது தேசிய மாணவர் படை தினம் கொண்டாப்படுகிறது. இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவ, மாணவியர் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.புலியகுளம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் நேற்று தேசிய மாணவர் படை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு, உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணி நடந்தது.பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, விநாயகர் கோவில் வழியாக, 1 கி.மீ., சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தது. பேரணியின்போது, 'துவக்கத்தில் இன்பம் முடிவில் துன்பம்', 'போதை இல்லாத வாழ்க்கை வாழ்வீர்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு மாணவர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இறுதியில் மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர், ஆசிரியர்கள் இருதய ராஜேந்திரன், வளன் அரசு உட்பட பலர் பங்கேற்றனர்.