உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதிய ஊராட்சிகள், ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்! முதன்மை செயலரிடம் வலியுறுத்தல்

புதிய ஊராட்சிகள், ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்! முதன்மை செயலரிடம் வலியுறுத்தல்

பொள்ளாச்சி;'தமிழகத்தில், பெரு ஊராட்சிகளை பிரிக்கவும், புதிய ஒன்றியங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலர் செந்தில்குமாரை, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன், பொதுச்செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் செல்வபாண்டி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.மாநில தலைவர் கூறியதாவது:தமிழகத்தில், 388 ஒன்றியங்கள், 12,525 ஊராட்சிகள் உள்ளன. தற்போது, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. இதனால், ஊராட்சிகளின் எண்ணிக்கை குறையும்.எனவே, தமிழகத்தில், பெரு ஊராட்சிகளை பிரிக்கவும், புதிய ஒன்றியங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறையில் தேசிய வேலை உறுதி திட்ட பணிகளை கவனிக்க வட்டார திட்ட அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் வாயிலாக ஊதியம் வழங்க வேண்டும்.ஊராட்சி செயலர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை சம்பள உயர்வு வழங்க வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் வழங்க வேண்டும்.தேசிய வேலை உறுதி திட்ட கணினி உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். லோக்சபா தேர்தல், 2024 தொடர்பாக, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். இவை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !