கொண்டைக்கடலை விதைப்பில் புதிய தொழில்நுட்பம்
பெ.நா.பாளையம் : கொண்டைக்கடலை விதைப்பில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த, கோவை மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாவட்டத்தில் கொண்டைக்கடலை விதைப்பு செய்ய பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வட்டாரங்கள் தயார் நிலையில் உள்ளன. விதைப்பு செய்யும் முன், தற்போது விவசாயிகளிடம் உள்ள என்.ஜி.பி., 47, 49, 3 ஆகிய ரக விதைகளுடன் ஏக்கருக்கு, 30 கி.கி., விதையுடன், 120 கிராம் டிரைகோடெர்மா விரிடியினை நன்கு கலந்து, காற்று புகாத பாலித்தீன் பையில் சேமித்து வைக்க வேண்டும். இதனால் விதையில் மண், நீர் வாயிலாக பரவக்கூடிய வேர் அழுகல் நோய் முழுமையாக கட்டுப்படுத்த முடியும். கடைசி உழவில் அடியுரமாக ஏக்கருக்கு யூரியா, 11 கி.கி., சூப்பர் பாஸ்பேட், 62 கி.கி., பொட்டாஷ், 8 கி.கி., மூன்றையும் கலந்து இடவேண்டும். விதைக்கும் போது விதையுடன் திரவ உயிர் உரங்களான பயிறு ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியம் மற்றும் பொட்டாஷ் பாக்டீரியா தலா, 50 மில்லி கலந்து உடனே விதைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் காற்றில் உள்ள தழைச்சத்து, பயிருக்கு கிடைக்கும். மண்ணில் கரையாமல் உள்ள மணிச்சத்து, கரைந்து எளிதில் பயிருக்கு கிடைக்கும். நமது மண்ணில் உள்ள அதிகம் கிடைக்காத நிலையில் உள்ள பொட்டாஷ் உரங்கள் எளிதில் பயிருக்கு கிடைக்கும்.விதைக்கும் போது வரிசைக்கு வரிசை ஒரு அடியும், வரிசையில் ஒரு அடிக்கு, 3 செடிகளும் இருக்குமாறு விதைக்க வேண்டும். இதனால் ஏக்கருக்கு ஒரு லட்சத்து, 32 ஆயிரம் செடிகள் இருக்கும். விதைப்பு செய்த மூன்று தினங்களுக்குள் ஏக்கருக்கு இரண்டு கி.கி., பயறு நுண்ணுாட்டத்தினை மணலுடன் கலந்து மேலாக இட வேண்டும். இதனால், பயிரின் செயல் திறன் கூடி, மகசூல் அதிகரிக்கும். இத்தகவலை கோவை வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் தெரிவித்தார்.