வால்பாறை: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்போது, 936 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், வெளி மாவட்டங்களை சேர்ந்த, 380 மாணவ, மாணவியர் உள்ளனர். அரசு கல்லுாரியில் படிக்கும் மாணவியருக்கு மட்டும் தற்போது தங்கும் விடுதி உள்ளது. ஆனால், மாணவர்களுக்கு போதிய அளவில் தங்கும் விடுதி வசதி இல்லை. இதனால், கல்லுாரி வளாகத்தில் தற் காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிரந்தரமாக தங்கும் விடுதி இல்லாததால், வெளியூர் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கல்லுாரி மாணவர்கள் கூறியதாவது: வால்பாறை அரசு கல்லுாரியில் சேலம், ஈரோடு, திருநெல்வேலி, திண்டுக்கல், கரூர், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் படிக்கின்றோம். போதிய விடுதி வசதி இல்லாததால் கல்லுாரியில் தொடர்ந்து படிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெளியூர் மாணவர்கள் நலன் கருதி, தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டபடி, கல்லுாரி வளாகத்தில் விடுதி கட்டித்தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர். கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: கோவை மாவட்ட கலெக்டரின் தீவிர முயற்சியால், கல்லுாரியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். பிற மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கல்லுாரி வளாகத்தில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு வசதியாக, விடுதி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கப் படவுள்ளது. இவ்வாறு, கூறினர்.