கோவில்பாளையம்: 'குடிநீருக்காக, ஐந்து ஆண்டுகளாக போராடுகிறோம். சாலை வசதி, வடிகால் வசதி இல்லை' என கிராம சபையில், கலெக்டரிடம் சரமாரியாக மக்கள் புகார் தெரிவித்தனர்.குடியரசு தினத்தை முன்னிட்டு, சர்க்கார் சாமக் குளம் ஒன்றியம், கள்ளிப்பாளையம் ஊராட்சி, பெத்தநாயக்கன்பாளையத்தில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் முத்துசாமி தீர்மானங்களை வாசித்தார். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவோம் என, உறுதிமொழி வாசிக்கப்பட்டு அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஒத்துழைப்பு அவசியம்
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:நடப்பாண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுதானியத்தில் அனைத்து சத்துக்களும் உள்ளன. சிறுதானியம் உட்கொண்டால் நோய் வருவதை தடுக்கலாம். டெங்கு பாதிப்பு தவிர்க்க, வீட்டில் பாத்திரங்களில் அதிக நாட்கள் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது. வீட்டுக்குள் கதவு ஜன்னல்களை அடைத்து புகை மருந்து அடிக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளி படிப்போடு நிறுத்தாமல், கல்லுாரிக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவில், வேலைக்குச் செல்லும் பெண்களில், 43 சதவீதம் பேர் தமிழகத்தில் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த ஊராட்சி, அடுத்த நிதியாண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.சிறுதானிய உணவு கண்காட்சி நடந்தது. கலெக்டரிடம், ஏராளமான மக்கள் மனுக்களுடன் சரமாரியாக புகார் தெரிவித்தனர். குமுறல்
குரும்பபாளையம், ராயல் என்கிளேவ் பகுதி மக்கள் கலெக்டரிடம் கூறுகையில், '65 குடும்பங்கள் வசிக்கிறோம். டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற்று வீடு கட்டியுள்ளோம். ஐந்து ஆண்டுகளாக விண்ணப்பித்தும், இதுவரை அத்திக்கடவு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. தெருவிளக்குகளும் மிக குறைவாக உள்ளன. ஒவ்வொரு கிராம சபையிலும் தெரிவிக்கிறோம். ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை' என்றனர்.பெத்தநாயக்கன்பாளையம் கீர்த்தி நகர் மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில், 50 வீடுகள் உள்ளன. சாலை வசதி இல்லை. ஒரு தெருவிளக்கு கூட இல்லை. குடிநீர் மிகவும் குறைவாக வருகிறது' என்றனர்.பெத்தநாயக்கன்பாளையம் அனு ஸ்ரீவரிஷ்டா குடியிருப்பு மக்கள் கூறுகையில், 'மூன்று ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு கோரி ஊராட்சி அலுவலகத்துக்கும், எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்துக்கும் நடையாய் நடக்கிறோம். ஆனால் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. வடிகால் வசதி இல்லை. இங்கு டிரான்ஸ்பார்மர் இல்லாததால், மிகவும் குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வருகிறது. மின்சாதனங்களை முழுமையாக பயன்படுத்த முடிவதில்லை. கழிவுநீர் தேங்கி நிற்கிறது' என்றனர். புகார்
குரும்பபாளையம் மக்கள் கூறுகையில், 'கோவை -- சத்தி தேசிய நெடுஞ்சாலையில் குரும்பபாளையத்தில் மூன்று ரோடு சந்திப்பில் தினமும் விபத்துகள் நடக்கின்றன. காலை மற்றும் மாலை நேரத்தில், போக்குவரத்து போலீசாரை அப்பகுதியில் நியமிக்க வேண்டும்' என்றனர்.சிலர் கூட்டத்தில் பங்கேற்ற கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமாரிடமும், அடிப்படை வசதி இல்லாதது குறித்து புகார் தெரிவித்தனர். நிதி ஒதுக்குவதாக எம்.எல்.ஏ., சமாதானம் தெரிவித்தார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், ஒன்றிய சேர்மன் கவிதா சண்முகசுந்தரம், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பஷீர் அகமது, ஊராட்சி தலைவர் ஆனந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் உறுதி
கலெக்டர் கிராந்தி குமார் நிருபர்களிடம் பேசுகையில், ''100 நாள் வேலை திட்டத்தில், நிலுவையில் உள்ள சம்பளம், மத்திய அரசு நிதி வந்தவுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.