| ADDED : ஜன 24, 2024 01:12 AM
சூலூர்;மாதப்பூரில் கொசு மருந்து அடிக்காததால் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என, ஒன்றிய கவுன்சிலர் புகார் கூறினார்.சூலூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், சேர்மன் பாலசுந்தரம் சுந்தரம் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,( கிராம ஊராட்சி) முத்துராஜூ, கமிஷனர் சிவகாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 23 பொருட்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், கரவளி மாதப்பூர் ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் பேசுகையில், மாதப்பூரில் சாக்கடை தூர்வாருவது இல்லை. கொசு மருந்து அடிப்பதில்லை. இதனால், காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூலகம் அருகில் சாக்கடை கால்வாய் அடைத்து, பல நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக, கழிவு நீரை அகற்றி, கொசு மருந்து அடிக்க வேண்டும், என்றார்.மாதப்பூர் ஊராட்சியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும், என, பி.டி.ஓ., உறுதி அளித்தார்.