நோ பார்க்கிங் தடுப்பால் இடையூறு; அத்துமீறலால் பாதிப்பு
பொள்ளாச்சி; வணிக கடைக்காரர்கள், சாலையில், 'நோ பார்க்கிங்' போர்டு, பூந்தொட்டிகள், தடுப்புகள் அமைத்து, வாகனங்களை நிறுத்த அனுமதி மறுப்பதால் அதிருப்தி நிலவுகிறது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் இருந்தால், வீதிகளில் நிறுத்துகின்றனர். வீட்டில் இடவசதி இல்லாதவர்களும் சாலையோரத்தில் காரை நிறுத்துகின்றனர். இது ஒருபுறமிருக்க, நகரில், வணிக கடைக்காரர்கள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். அவரவர் கட்டடங்களுக்கு ஏற்ப 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்துவதும் கிடையாது. மாறாக, தங்கள் கடைகள் முன், 'நோ பார்க்கிங்' போர்டு, பூந்தொட்டிகள், தடுப்புகள் அமைத்து, சாலையில் வாகனங்களை நிறுத்த மக்களுக்கு அனுமதி மறுக்கின்றனர். மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சாலையை ஆக்கிரமித்து புதிதாக வைக்கப்பட்டுள்ள 'நோ பார்க்கிங்' போர்டு பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மக்கள் கூறியதாவது: நகரில், விதிமீறி வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கும் பொறுப்பு, போக்குவரத்து போலீசாருக்கு உள்ளது. சில வணிக கடைக்காரர்கள் அவர்கள் கடை முன்பாக யாரும் வாகனங்கள் நிறுத்த கூடாது என்பதற்காக தடுப்பு அமைக்கின்றனர். இதேபோல, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், தனி வீடுகளின் உரிமையாளர்களும் பொது இடங்களை ஆக்கிரமித்து தவறாக பயன்படுத்துகின்றனர். சாலையை ஆக்கிரமித்து, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 'நோ பார்க்கிங்' போர்டுகள், பூந்தொட்டிகளை அகற்ற போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.