நான்கு வாரமாக சம்பளம் வரலே! 100 நாள் திட்ட தொழிலாளர் சோகம்
அன்னுார்: அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளிலும், 100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படும், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில், சாலை அமைத்தல், மரக்கன்று நடுதல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல், வட்டப்பாத்தி அமைத்தல் ஆகிய பணிகள் செய்யப்படுகின்றன.ஒவ்வொரு வாரமும் வியாழன் முதல் புதன்கிழமை வரை செய்யப்பட்ட பணிகளுக்கு அடுத்த திங்களன்று சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கடந்த நான்கு வாரங்களாக செய்யப்பட்ட பணிகளுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை.தொழிலாளர்கள் கூறுகையில், 'தீபாவளி பண்டிகைக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஆனால், கடந்த நான்கு வார சம்பளம் இதுவரை வழங்கவில்லை. உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'நம் ஊராட்சியில் மட்டும் அல்லாமல், கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் சம்பளம் நிலுவை உள்ளது' என்றனர்.