மேலும் செய்திகள்
தொழுநோய் கணக்கெடுப்பு 2ம் கட்டமாக இன்று துவக்கம்
24-Oct-2025
கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட, தொழுநோய் கண்காணிப்பு பணிகள், 97 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், மாநில அளவில் கணக்கெடுப்பு பணி ஆக.,1ம் தேதி முதல் 20ம் தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, மாவட்டத்தில், காரமடை, தாளியூர், எஸ்.எஸ்.குளம், புலுவாபட்டி, நல்லாட்டிபாளையம், ஆனைமலை ஆகிய ஆறு வட்டாரங்களில் கடந்த அக்., 24ம் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியில், 367 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை, 1 லட்சத்து, 71 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்துள்ளன. நவ.10ம் தேதி வரை பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறியதாவது: தொழுநோய் இரண்டாம் கட்ட கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை, புதிதாக, 14 பேருக்கு பாதிப்பு உள்ளதை கண்டறிந்து சிகிச்சை துவக்கியுள்ளோம். தீவிர நிலை பாதிப்புடன் கோவையில் யாரும் இல்லை; ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை துவங்கப்படுகிறது. கண்காணிப்பு பணியின் போது, வீடுகள் மட்டுமின்றி, தொழிற்சாலைகள், அருகில் உள்ள பள்ளி, கல்லுாரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இரண்டாம் கட்ட கண்காணிப்பு பணி மேலும், நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் தயக்கமின்றி பரிசோதனை செய்துகொள்ளலாம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதல் குணப்படுத்திவிட முடியும். இப்பாதிப்பு குறித்து, அச்சம், பயம், தயக்கம் ஏதும் தேவையில்லை; விழிப்புணர்வு மட்டுமே தேவை. இவ்வாறு, அவர் கூறினார்.
24-Oct-2025