வேழ முகத்தோனே, ஞான முதல்வனே... விநாயகனே! விநாயகர் சதுர்த்தி; கோலாகலமாக கொண்டாட்டம்
- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகப்பெருமான் வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. * கடைவீதி பாலகணேசர் கோவிலில், விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விநாயகப் பெருமான் வைர கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். * குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன் மற்றும் மகா கணபதி கோவிலில், மாலை, 4:00 மணிக்கு மகாகணபதி ேஹாம், 18 வகையான அபிேஷக பூஜைகள், 21 வகையான இலை மற்றும் மலர்கள் கொண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. * வடுகபாளையம் போத்தீஸ் கார்டன் செல்வ விநாயகர், வில்வநாத யோகேஸ்வரர் கோவிலில், மாலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, 108 வலம்புரி சங்கு பூஜைகள் நடந்தது. * சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது. * ஜூபிளி கிணறு வீதி ஆதிசக்தி விநாயகர் கோவிலில், அபிேஷகம், அலங்கார பூஜை நடந்தது. ராஜஅலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். * கிணத்துக்கடவு பெரியார் நகர் பாலவிநாயகர் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. சிங்கராம்பாளையம் அன்னை அபிராமி நகர், கஜமுக விநாயகர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, அலங்கார பூஜைகள் நடந்தது. ஆதிபட்டி விநாயகர் கோவில், பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. * வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. அதன்பின், விநாயகருக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். * வால்பாறை எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், சிறுவர் பூங்கா ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில்களில் நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடைபெற்றது. தொடர்ந்து அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. சிலைகள் பிரதிஷ்டை * பொள்ளாச்சி ஜூபிளி கிணறு வீதியில், விநாயகர் சேவா சங்கம் சார்பில், 19ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. காலை, 6:00 மணிக்கு பிரதிஷ்டை, கணபதி ேஹாமம் நடந்தது. கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, அன்னதான விழாவை துவக்கி வைத்தார். இன்று இரவு, 7:00 மணிக்கு இசை நிகழ்ச்சி, 29ம் தேதி மதியம், 1:00 மணிக்கு சிக்காட்ட மேளத்துடன் விநாயகர் திருவுருவம் விசர்ஜனம் செய்யப்படுகிறது. * பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் ஹிந்து அமைப்புகள் சார்பில், சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஹிந்து முன்னணி சார்பில், 100 சிலைகள், ஹிந்துமக்கள் கட்சி (தமிழகம்) - 5, விஸ்வ ஹிந்து பரிஷத் - 1, தமிழ்நாடு வி.எச்.பி. - 2, அகில பாரத அனுமன் சேனா - 1 உலக நல வேள்விக்குழு - 3, பொதுமக்கள் - 125, என மொத்தம், 237 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆனைமலை தாலுகாவில், 206 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. * வால்பாறை அண்ணாநகர், கலைஞர்நகர், காமராஜ்நகர், கக்கன்காலனி, திருவள்ளுவர் நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. * வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பா.ஜ., கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், மண்டல் தலைவர் செந்தில்முருகன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவில் அ.தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வால்பாறையில் 31ல் விசர்ஜனம்!
வால்பாறையில் ஹிந்து முன்னணி சார்பில் கோவில் மற்றும் வீடுகளில், 108 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோவை தெற்கு மாவட்ட ஹிந்துமுன்னணி துணைத்தலைவர் சேகர் கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில் உள்ள பல்வேறு கோவில்களில், 3.5 அடி முதல், 10.5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யபட்டன. தொடர்ந்து ஐந்து நாட்கள் பக்தர்கள் வழிபாட்டுக்கு பின், வரும் 31ம் தேதி மதியம், 1:00 மணிக்கு அனைத்து சிலைகளும் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. அதன்பின் நகரின் முக்கிய வீதி வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மாலை, 5:00 மணிக்கு நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகிறது,'' என்றார்.