உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு தெரு; பல பிரச்னைகள்-தீர்க்கப்படுவது எப்போது?

ஒரு தெரு; பல பிரச்னைகள்-தீர்க்கப்படுவது எப்போது?

கழிவுநீர் தேக்கம்

சிங்காநல்லுார், 61வது வார்டு, கள்ளிமடை, ஆகாஷ் ஹோம்ஸ் குடியிருப்பு பகுதியில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகளவில் இருப்பதால், டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பது குறித்து புகார் செய்தும் நடவடிக்கையில்லை.- சங்கவி, சிங்காநல்லுார்.

மோசமான ரோடு

கோவை மாநகராட்சி, 51வது வார்டு, ராஜீவ் காந்தி நகரில் தார் சாலையே தெரியாத அளவிற்கு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. மண் சாலை போல எங்கும் மேடு, பள்ளமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் செல்லவே முடியவில்லை.- தங்கவேல்,ராஜீவ் காந்திநகர்.

சேதமடைந்த கம்பம்

சின்னவேடம்பட்டி, பாரதி வீதி, எம்.ஆர்., நகர், 'எஸ்.பி -32, பி-17' என்ற எண் கொண்ட கம்பத்தின் கான்கிரீட் போஸ்டில் பெரிய, பெரிய பிளவுகள் காணப்படுகிறது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளது. சேதமடைந்த கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும்.- வெற்றிவேல், எம்.ஆர்., நகர்.

குழிகளில் சிக்கும் வாகனங்கள்

சாய்பாபாகாலனி, அழகேசன் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள குழிகளில் அடிக்கடி வாகனங்கள் மாட்டிக்கொள்கின்றன. சிறிய விபத்துகளும் நடக்கிறது. சேதமடைந்த சாலையைசீரமைக்க வேண்டும்.- பாலு, சாய்பாபாகாலனி.

சேறும், சகதியும்

துடியலுார், வெள்ளக்கிணறு பகுதியில், வி.சி.வி., வீதியில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. வாகனங்கள் சேற்றில் மாட்டிக்கொள்கின்றன. வாகனஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் வழுக்கி விழுகின்றனர். பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர்.- சதீஷ், துடியலுார்.

தெருவிளக்கு பழுது

சரவணம்பட்டி, 29வது வார்டு, ஜனதா நகர் மேற்கு வள்ளுவர் வீதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தெருவிளக்கு எரியவில்லை. அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடிக்கடி தெருவிளக்குகள் பழுதாவதால் நிரந்தர தீர்வு காண வேண்டும்.- ஆதிசிவன், சரவணம்பட்டி.

தெருவிளக்கு பழுது

காந்திமாநகர், எல்.ஐ.ஜி., -2 பகுதியில், செல்வ விநாயகர் கோவில் எதிர்புறம் உள்ள வீதியில், 'எஸ்.பி -21, பி-40' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு, 6:00 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது.- சிவ்துருவன், காந்திமாநகர்.

வீதியே நாறுது

வெள்ளலுார், வி.கே.ஆர்., நகரில், சாலையோரம் திறந்தவெளியில் தொடர்ந்து குப்பையை கொட்டுகின்றனர். குட்டி மலை போல தேங்கிக்கிடக்கும் கழிவுகள் அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.- விஜய், வெள்ளலுார்.

சாலை குழிகளால் விபத்து

இடையர்பாளையம், ஜே.ஜே.,நகர்,நேரு வீதி, இரண்டாவது கிராசில், சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் உள்ள குழியால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதிகாரிகளிடம் பலமுறை குழிகளை சீரமைக்க வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.- முருகேசன், இடையர்பாளையம்.

ஒரு தெரு; பல பிரச்னைகள்

மலுமிச்சம்பட்டி, அவ்வை நகரில், கடந்த 2023 டிச., மாதம் முதல் மாதம் ஒரு முறை கூட குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. குண்டும், குழியுமான சாலையால் விபத்துகள் நடக்கிறது. தெருவிளக்குகளும் எரியாததால் இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும், லட்சுமிநாராயண காலேஜ் ரயில்வே பால சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கும் பிரச்னையும் இருக்கிறது.- பாஸ்கரன், அவ்வைநகர்.

சேதமடைந்த சாலை

கோவை மாநகராட்சி, 18வது வார்டு, ராமசாமி நகர், மாதா அமிர்தானந்தமாயி பள்ளி செல்லும் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை முறையாக சீரமைக்கவில்லை. மழைக்காலங்களில் நடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும் மிகவும் சிரமமாக உள்ளது.- சுமதி, ராமசாமி நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ