உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊட்டி சாலையில் சீரமைப்பு பணிகள் துரிதம்

ஊட்டி சாலையில் சீரமைப்பு பணிகள் துரிதம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், சீரமைப்பு பணிகள் மற்றும் வெள்ளை அடிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.கோவை மாவட்டத்தையும், நீலகிரி மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக, மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு உள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், இப்பாலத்தின் வழியாக ஊட்டி, கோத்தகிரிக்கு சென்று வருகின்றன. இப்பாலம் கட்டி, 40 ஆண்டுகளுக்கு மேலாகின்றன. அதனால் பாலத்தின் இரண்டு பக்கம் உள்ள கைப்பிடி தடுப்பு சுவரில், சிமெண்ட் கான்கிரீட்டுகள் உடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாலம், சாலைகள் சீரமைக்கு பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை உதவி பொறியாளர் தனுஸ்ரீ கண்காணித்து வருகிறார்.இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் முரளிகுமார் கூறியதாவது: ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் ஆகும். அதனால் வெளியூர்களிலிருந்து ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். அவர்கள் சிரமம் இல்லாமல் செல்வதற்கும், பாதுகாப்பான பயணத்துக்கும், மேட்டுப்பாளையம் நகரில் இருந்து, குன்னூர் சாலையில் பர்லியாறு வரை, சாலையில் மராமத்து வேலைகள் நடைபெறுகின்றன. சாலையின் இரு பக்கம் உள்ள தடுப்பு சுவற்றுக்கு வெள்ளை அடிக்கும் பணிகள், ஆட்களை வைத்தும், இயந்திரங்கள் வாயிலாக நடைபெறுகின்றன. சாலையில் உள்ள குழிகளுக்கு, தார் கலவை போட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலத்தில், சேதம் அடைந்துள்ள கைப்பிடி சுவர்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நாளை (இன்று) பாலத்துக்கு வெள்ளை அடிக்கும் பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி