கோவை: ரசாயன முறையில் வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உர மானியங்களால் நேரடி பயன் கிடைப்பதைப் போல, இயற்கை விவசாயிகளுக்கும் நேரடிப் பயன் தரும் சலுகைகளை அரசு வழங்கினால், இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என, இயற்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2வது நாளாக நேற்று நடந்தது. மாநாட்டில், இயற்கை வேளாண்மை சார்ந்த அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் வேளாண் துறை எதிர்காலத்துக்காக சாத்தியமிக்க, பருவநிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட அதே சமயம் பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை ஊக்குவிக்கும் விதத்தில் மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில், இயற்கை வேளாண்மை சார்ந்த 60க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தி மையங்கள், வேளாண் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மையங்கள், பெண்களால் மட்டுமே நடத்தப்படும் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட, தென்னங்கருப்பட்டி, பனங்கருப்பட்டி, கருப்பட்டித் தூள், பனங்கிழங்கு மாவு, கருப்பட்டி அல்வா, கருப்பட்டி லட்டு உள்ளிட்ட உடன்குடி பனைப் பொருட்கள், தென்னை ஓலை, பனை நார், வாழை நார்களால் உருவாக்கப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், வேளாண் கைவினைப் பொருட்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், விதைகள், பாரம்பரிய காய்கறிகள், தேன், காளான், சீதா, மாங்காய், கொய்யா , சீனிப்புளியங்காய் உள்ளிட்ட பழ வகைகள் பழங்கள், சிறுதானிய உணவுகள், ஆட்டுக்கால் உள்ளிட்ட கிழங்கு வகைகள் என ஏராளமான இயற்கை விளைபொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. நெல் ரகங்களில், தூயமல்லி புழுங்கல் மற்றும் பச்சரிசி, கிச்சில்லி சம்பா, பூங்கார், கருப்புக்கவுனி, கருங்குருவை, சீரகசம்பா, கைக்குத்தல், மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி, காட்டுயானம் சிறுதானியங்களில் வரகு, குதிரைவாலி, சாமை, தினை, கேழ்வரகு, கம்பு, வெள்ளைச்சோளம், சிவப்பு சோளம், நாட்டுக் கம்பு, கருப்பு உளுந்து, எண்ணெய் வகைகளில் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை, பசு நெய், அவல், நாட்டுச்சர்க்கரை, மண்டை வெல்லம் என அனைத்து வகையான உணவுப் பொருட்கள், பாரம்பரிய ரகங்கள் ஸ்டால்களில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்டால்களை விவசாயிகள் பார்வையிட்டு ஆர்வமாக விசாரித்தறிந்தனர். மேலும், நீடித்த, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயனம் இல்லாத வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்த கருத்தரங்குகள் நடைபெற்றன. மதுரை வேளாண் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு மைய (மாபிப்) உறுப்பினரும், மட் பீல்டு நிறுவன இயக்குநருமான கணேசமூர்த்தி 'தினமலர்' நாளிதழிடம் பகிர்ந்து கொண்டதாவது: 'மட் பீல்டு' அமைப்பு வாயிலாக 350 விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். எங்களது பொருட்களை விற்பனை செய்வதை விட, சக விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இயற்கை விவசாயம் அதன் விளைபொருட்கள் பற்றிய விழிப்புணர்வு, புரிதலை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நிறைய விவசாயிகள் எங்கள் உற்பத்திப் பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். மாநாட்டுக்கு விவசாயிகள், மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசாயனத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாயத்துக்கு இணையான அல்லது சற்றேறக்குறைய அந்த அளவுக்கு வருவாய் கிடைத்தால்தான் விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு வருவர். தற்போது விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், இயற்கை விவசாயம் செய்ய அதிகம்பேர் முன்வந்துள்ளனர். ஆனால், அதற்கான சந்தையை உருவாக்குவது சற்று சிரமமாக உள்ளது. ரசாயன வேளாண்மை அளவுக்கு அதிக மகசூல், இயற்கை விவசாயத்தின் சில சாகுபடிகளில் கிடைக்காது. அதனால் சற்று விலை கூடுதலாக இருக்கும். வழக்கமாக வாங்கும் சோப்பு, ஷாம்பூ போன்றவை விலையை கூடுதலாக கொடுத்து வாங்கும் நாம், ஆரோக்கியத்துக்காக ஒரு கிலோ அரிசிக்கு 15 அல்லது 20 ரூபாய் கூடுதல் விலை கொடுத்து வாங்க யோசிக்கக்கூடாது. அரசும், இயற்கை விவசாயிகளுக்கு உரிய சலுகைகளை வழங்க வேண்டும். ரசாயன முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல நேரடி மானிய சலுகை இயற்கை விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். அதாவது, ஒரு மூட்டை யூரியா 1,700 ரூபாய் என்றால், அரசு மானிய விலையில், விவசாயிக்கு சுமார் ரூ. 300, 350க்கு கிடைக்கிறது. இதனால், ரசாயன முறையில் சாகுபடி செய்யும் விவசாயிக்கு நேரடி பயனாக ரூ. 1400 வரை கிடைக்கிறது. ஆனால், இதுபோன்ற சலுகைகள் இயற்கை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இயற்கை விவசாயிகளுக்கும் உரிய சலுகைகள் வழங்கப்பட்டால், இன்னும் அதிக அளவிலான விவசாயிகள் இந்த வேளாண் முறைக்கு மாறுவர். அவர்களுக்கும் சாகுபடி செலவு கட்டுபடியாகும். மக்களுக்கும் ஆரோக்கியமான உணவு, நியாயமான விலையில் கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். கோவையில் நடக்கும் இயற்கை வேளாண் கண்காட்சி இன்று நிறைவடைகிறது.