உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணியிடம் மாறாத ஊராட்சி செயலர்கள்! விதிமுறை தளர்த்தப்படுமா?

பணியிடம் மாறாத ஊராட்சி செயலர்கள்! விதிமுறை தளர்த்தப்படுமா?

நீண்ட காலமாக, ஒரே இடத்தில் வேலை பார்த்து வரும் ஊராட்சி செயலர்களை, பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பொதுவாக, அரசுப்பணிகளில் வேலை பார்க்கும் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள், 3 ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.வருவாய்த்துறை, போலீஸ் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளிலும், இது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முறைகேடுகளை தடுக்கவும், பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும், இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.ஆனால், ஊராட்சிகளில் வேலை பார்க்கும் ஊராட்சி செயலர்களுக்கு, இந்த விதிமுறை உட்படாது. மாறாக, ஊராட்சி செயலர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள், புகார்கள் எழும் பட்சத்தில், பி.டி.ஓ., உத்தரவின் பேரில், அவர்கள் வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.மற்றபடி, இதர அரசு அலுவலர்களைப்போன்று, அவர்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவதில்லை.இதன் காரணமாக, பெரும்பாலான ஊராட்சி செயலர்கள், பல ஆண்டு காலமாக ஒரே ஊராட்சிகளில் வேலை பார்த்து வருகின்றனர்.ஊராட்சித்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் ஆதரவு காரணமாக, ஊராட்சி செயலர்கள், பணியிட மாற்றம் செய்யப்படாமல், தாங்கள் இருக்கும் இடத்திலேயே வேலையை தக்க வைத்து வந்தனர்.அரசியல் தலையீடு காரணமாக, அதிகாரிகளாலும், பணியிட மாற்றம் செய்யப்பட முடியாத சூழல் இருந்தது. தற்போது, ஊராட்சிகள் அனைத்தும், தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, நீண்ட நெடுங்காலமாக ஒரே இடத்தில் வேலை பார்த்து வரும் ஊராட்சி செயலர்களை, பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி