| ADDED : ஜன 24, 2024 01:37 AM
போத்தனூர்;'மாச்சம்பாளையம் மாரியம்மன் கோவிலில், பஜனைக்கு அனுமதி தர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அயோத்தியில் நேற்று முன் தினம் ராமர் பிராண பிரதிஷ்டை நடந்தது. இதனையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு, பஜனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், செயல் அலுவலர்களின் அனுமதியுடன் இந்நிகழ்ச்சிகளை நடத்த, ஐகோர்ட் அறிவுறுத்தியது.இதன்படி மாச்சம்பாளையம் மாரியம்மன், கோபாலகிருஷ்ணர் கோவிலில் மாலை, 6:00 மணியளவில், ராமர் பாராயணம் குறித்த பஜனை பாடி, ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர்.இதற்காக, சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., பொது செயலாளர் கமல் பாலன், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் உள்ளிட்டோர் கோவிலுக்கு வந்தனர்.தகவலறிந்த கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, கோனியம்மன் கோவில் பணியாளர் சரவணனை, மாச்சம்பாளையத்திற்கு அனுப்பினார். அவர், பஜனை நடத்தக்கூடாது என கூறினார்.சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் போலீசாருடன் அங்கு வந்து விசாரித்தார். பின் அங்கிருந்து சென்றுவிட்டார்.தொடர்ந்து, சுந்தராபுரம் மண்டல் பா.ஜ., தலைவர் முகுந்தன் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் ராமர் பாராயணம், பஜனையில் ஈடுபட்டனர். கோவிலை வலம் வந்து, வழிபட்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.