கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக, நடந்த பாரா விளையாட்டு போட்டிகளில், மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கோவையின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் கோயமுத்துார் விழா நடப்பாண்டு, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பாரா விளையாட்டு போட்டி, கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், கோவை தவிர, காஞ்சிபுரம், தேனி, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, 350 மாணவர்கள், 150 பெரியவர்கள் பங்கேற்றனர். 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். ஆண்கள் டேபிள் டென்னிஸ்(வீல் சேர்) போட்டியில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் முதலிடம் பிடித்தார். கோவையை சேர்ந்த சுரேஷ், இரண்டாமிடம் பிடித்தார். மதுரையை சேர்ந்த கவுதமன், கோவையை சேர்ந்த மணிகண்டன் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஹேமா முதலிடம், ரம்யா இரண்டாம் இடம், ரிஸ்வானா பர்வீன் மூன்றாம் இடம் பிடித்தனர். வீல்சேர் பென்சிங் போட்டியில், கண்ணன் முதலிடம், டில்லிபாபு இரண்டாம் இடம், சதீஸ் மூன்றாம் இடம், தாட்சாயினி நான்காம் இடம் பிடித்தனர். ஆண்கள் எறிபந்து போட்டியில், சாய் கிருபா அகாடமி முதலிடம், கவுமாரம் பிரசாந்தி அகாடமி இரண்டாம் இடம் பிடித்தன. பெண்களுக்கான போட்டியில், ஸ்டார் ஸ்பெசிவிக் பள்ளி, கோவை இ.டி.எம்.எஸ்.இ., இரண்டாம் இடம் பிடித்தன. கால்பந்து போட்டியில், ஸ்டார் ஸ்பெஷல் பள்ளி முதலிடம், கவுமாரம் பிரசாந்தி அகாடமி இரண்டாம் இடம் பிடித்தன.