முடங்கிய பட்டு வளர்ச்சி துறை சேவை மையம்
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பட்டு வளர்ச்சி துறையின் தொழில்நுட்ப சேவை மைய கட்டடம் பயன்பாடின்றி கிடக்கிறது. பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு அரசு பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் தொழில்நுட்ப சேவை மையம் கட்டடம் உள்ளது. இது பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்காகவும், அவர்கள் பட்டு புழு வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு, திறம்பட தொழில் நடத்தவும், பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இங்குள்ள தொழில்நுட்ப சேவை மைய கட்ட டம் பயன்பாடின்றி கிடக்கிறது. இக்கட்டடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடக்கின்றன. போதை தலைக்கேறிய குடிமகன்கள் கட்டடத்தின் முன்பு படுத்து உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது குறித்து கூடலூர் கவுண்டம்பாளையம் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் கூறுகையில், பல ஆண்டுகளாக பட்டு வளர்ச்சி துறை, இக்கட்டடத்தை எவ்வித பயன்பாடும் இல்லாமல் பூட்டியே வைத்துள்ளது. அலுவலர்கள் யாரும் வந்து செல்வதில்லை. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் எங்கும் பட்டுப்புழு வளர்ப்பது இல்லை. எவ்வித பயன்பாடும் இல்லாத இக்கட்டடத்தை பிற விவசாயிகள் அல்லது பொது காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், பயன்பாடு இல்லாத இக்கட்டடம் இடிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகும் அபாயம் உள்ளது என்றார்.