ரேஷன் கடைகளில் சரியான அளவில் பொருட்கள் வாங்க பொறுமை தேவை; புது டெக்னாலஜி வந்தாலும் காத்திருக்கணும்
கோவை, ; ரேஷன் கடைகளில் புளூடூத் இணைப்பு தராசில், பொருட்கள் வழங்கும் போது ஒரு மணி நேரத்துக்கு 10 பேருக்குதான் பொருட்கள் வழங்க முடியும் என்கின்றனர், ரேஷன் கடை ஊழியர்கள். கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன் கடைகள் உள்ளன. உணவு பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் என்பதற்காக, ரேஷன் கடைகளில் எடைபோடும் எலக்ட்ரானிக் தராசை, பிஓஎஸ் மெஷினுடன் புளூடூத் மூலம் இணைத்து, எடை போடும் புதிய நடைமுறை, அமலுக்கு வந்துள்ளது. கோவையில் 1000 ரேஷன் கடைகளில், இந்த புதிய நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த தராசில் எடை போடும் போது, ஒரு கிராம் அளவு கூட குறையாமல், எடை துல்லியமாக இருக்கும். இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் இதை வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் பொருட்கள் வாங்க நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதாக, கார்டுதாரர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.இது குறித்து, ரேஷன்கடை ஊழியர்கள் கூறியதாவது: கார்டுதாரர்கள் வரிசையில் நின்று, பொறுமையாக பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். புளூடூத் இணைப்பு தராசில் எடை போட, ஒரு கார்டுக்கு ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் வரை ஆகிறது. முன்பு பில் போட்ட பிறகு, பொருட்கள் வழங்கப்பட்டன. இப்போது பொருட்கள் வாங்கிய பிறகு பில் போடப்படுகிறது. ஒரு கார்டுதாரர் நான்கு பொருட்கள் வாங்குகிறார்கள் என்றால், பொருட்களின் எடை அளவு, ஒன்றன் பின் ஒன்றாக தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு, பில் பிரிண்ட் எடுக்கப்படுகிறது. சர்வர் வேகம் குறையாமல் இருந்தால், பொருட்கள் வழங்குவதில் தாமதம் இருக்காது. சர்வரில் பிரச்னை இருந்தால், காலதாமதம் ஆகும். ஒரு மணி நேரத்துக்கு, 10 பேருக்குதான் பொருட்கள் வழங்க முடியும். கார்டுதாரர்கள் அவசரப்படாமல் பொருட்களை வாங்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள், மூட்டையாக சப்ளை செய்யப்படும் போது, எடை குறைவாக வழங்கப்படுகிறது. அதை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.